மேல்கீழ் என்று உறைபனிக்குள்ளே நான்; மேலோ கீழோ – எதைக்கொண்டு அதைத் தகர்ப்பேன் நான்? அச்சம் தவிர்த்து, நம்பிக்கைத் துணைகொண்டு வருவேன் நான், நம்மின் சந்திப்பிற்கும் என்னின் அடுத்த பணிகளுக்குமாய்! மேலுள்ள உறைபனியின் வெடிப்பு விரிகிறது! அறுவடைக் கால உழவனைப் போல் நான் வியர்வையில் நனைகிறேன். என் அன்பே! நிச்சயம் மீண்டும் உன்னிடம் நான் வருவேன், என்னின் அம்பாப் பாடலில் நான் எழுதியபடியே! இளைய வயதினன் நான் – இப்பொழுதுதான் நாற்பதைக் கடந்திருக்கிறேன். இணைவியாலும் இறைவியாலும் காப்பாற்றப்பட்டிருக்கிறேன், பன்னிரண்டு ஆண்டுகளாய்! பரம்பொருளுக்கு எந்தப் பாடல் பிடிக்குமென்று எனக்குத் தெரியும். என் வாழ்வை என் பாடல்கள் நியாயப்படுத்துமென்றே நம்புகிறேன்!
© Ramaswamy Murugiah. மொழிபெயர்ப்பு, 2015